புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்தவுள்ள இஸ்ரோ: தலைவர் நாராயணன் தகவல்
நாசாவுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ஜூலை 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் நடைபெற்ற கலாம் நினைவுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் பேசினார்.
அவரது உரையில், “இஸ்ரோ இன்று சந்திரனை நோக்கி விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு வளர்ச்சி பெற்று விட்டது. ஆரம்பத்தில் வெறும் 35 கிலோ எடையுள்ள ராக்கெட்டிலிருந்து தற்போது 75,000 கிலோ எடையுள்ள ராக்கெட்டை விண்வெளிக்கு ஏவும் திறனை பெற்றுள்ளோம். இந்த ராக்கெட் சுமார் 40 மாடி கட்டிட உயரம் கொண்டது,” என்றார்.
புவி மேற்பரப்பை கண்காணிக்கச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நாசா-இஸ்ரோ இணை முயற்சியில் உருவான ‘சிந்தடிக் அப்பர்சர் ரேடார்’ (NASA-ISRO Synthetic Aperture Radar – NISAR) செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ராக்கெட்டின் மூலம் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் அனுப்ப உள்ளோம். இதற்கான இறுதி ஆயத்தங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்கம், புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்களைப் பற்றிய துல்லிய தகவல்களை வழங்கும்.”
மேலும், “தற்போது இஸ்ரோ 12 ராக்கெட் ஏவுதலை 2025-ம் ஆண்டுக்குள் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா விண்கலத்தை அனுப்ப உள்ளோம். இந்திய விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பி, அவரை மீண்டும் புவிக்கு கொண்டு வரும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. அப்துல்கலாம் சொன்னபடி, இந்தியா தனது 100-வது சுதந்திர ஆண்டு காலமான 2047-இல் ஒரு வல்லரசாக மாறும்; அந்த நேரத்தில் இஸ்ரோ முக்கிய முன்னோடியாக இருக்கும்,” என நாராயணன் கூறினார்.
இதற்குமுன், இஸ்ரோவின் வரலாறை விளக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் உருவாக்கிய பிஎஸ்எல்வி, சந்திரயான் போன்ற ராக்கெட்டுகளின் மாதிரிகளை இஸ்ரோ தலைவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உயிரியல் விஞ்ஞானி சுல்தான் அஹமது இஸ்மாயில், மருத்துவர் ஜோசப் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.