புதுச்சேரியில் புதிய பயனாளர்களுக்கு அடுத்த மாதம் ₹1,000 உதவித் தொகை வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், மணவெளி தொகுதி டி.என். பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலங்கள் முதல் கட்டமாக முறையே 236 மற்றும் 82 பயனாளிகளுக்கு இலவசமாக மனைப்பட்டாக்களாக வழங்கும் விழா இன்று தவளக்குப்பம் நாணமேடு அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளிடம் பட்டாக்களை நேரில் வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி. ரமேஷ், செந்தில்குமார், நலத்துறை செயலாளர் முத்தம்மா, ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ரங்கசாமி பின்னர் உரையாற்றியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் குடிசை வீடுகள் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். இப்போது அந்த இலக்கில் 90 சதவீதம் நிறைவேறியுள்ளது. மேலும், கல் வீடுகள் கட்டப்பட்டதால் தீ விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன. மக்கள் தேவைகளை முன்னிட்டு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
மற்ற மாநிலங்களில் பட்டியலின சமூகங்களுக்கு தனியாக சிறப்புத்தொகை ஒதுக்கப்படாத நிலையில், புதுச்சேரி அரசு பல ஆண்டுகளாகவே இந்த நிதியை ஒதுக்கி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ₹150 கோடி அதிகரித்து, ₹525 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. நிலையான வீடு இருந்தால் மதிப்பும், வாழ்க்கை தரமும், வருமானமும் உயரும். கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியிலும், விருப்பமுள்ள தனியார் கல்வி நிறுவனங்களிலும் படிக்க தேவையான நிதியை அரசு வழங்குகிறது. இதற்காக ₹65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் – மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், செவிலியர் கல்வி ஆகிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 முடித்தவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன; அவர்களின் கட்டணத்தையும் அரசு ஏற்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலிருந்து அனைத்து உயர்கல்வி துறைகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மனைப்பட்டாக்கள் தகுதி உள்ள அனைவருக்கும் அளிக்கப்படுகின்றன. முந்தைய ஆட்சியில் அரசு வேலை கிடைக்கவே இயலவில்லை. தற்போதைய ஆட்சியில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; மேலும் 1,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முன்னர் வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா 400 சதுர அடியாக இருந்தது. இப்போது முதன்முறையாக 800 சதுர அடியாக வழங்கப்படுகிறது. அனைவரும் வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பட்டியலின மாணவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ₹7 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தேன்; விரைவில் அந்த தொகையும் வழங்கப்படும். எஸ்சி/எஸ்டி மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களில் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அம்பேத்கரைப் பற்றிய அறிவை வளர்க்க சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் மனைப்பட்டா இல்லை என்ற கோரிக்கைகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளதால், கிராமப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்குப் பிறகு வீடுகள் கட்டித் தரப்படும்.
இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடரும்; கூடுதலாக 2 கிலோ கோதுமை வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தப்பட்டு, ஒழுங்காக வழங்கப்படுகிறது.
புதிய 10,000 விண்ணப்பங்கள் முதியோர் உதவித் தொகைக்காக கிடைத்துள்ளன; அவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதமே வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கான ₹1,000 நிதி உதவியும் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.