வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை – ஐகோர்ட் அமர்வின் முடிவு
நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் குறை கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதனை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது சாதியப் பாகுபாடுடன் நடந்து கொள்கிறார் என வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டு, வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் பரவியது. இதற்கிடையே, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் கே.ராஜசேகர் முன்னிலையில் ஜூலை 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் 3வது எதிர்மனுதாரரின் வழக்கறிஞராக வாஞ்சிநாதன் இருந்ததால், அவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஹாஜராகினார்.
அப்போது, “நாம் இருவரில் ஒருவர் சாதி சார்ந்த முறையில் செயல்படுவதாக நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். இன்னும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?” என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, “தஞ்சை பல்கலைக்கழக வழக்கில் இருந்து விலகியுள்ளேன். நீதித்துறையைப் பற்றிய குற்றச்சாட்டில் எழுத்து மூலம் கேட்டால் பதிலளிக்கிறேன்” என்று வாஞ்சிநாதன் பதிலளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் நேரில் விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த சூழலில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை வாஞ்சிநாதன் மீது எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.ஹரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். வழக்கறிஞர்கள் சங்கங்களும் அதே கோரிக்கையை முன்வைத்தது.
விசாரணை மீண்டும் இன்று (ஜூலை 28) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இடம்பெற்றது. வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி தனது விளக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக முதல்வருக்கு பல்கலைக்கழக வேந்தருக்கு நியமன அதிகாரம் அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் நடத்திய விசாரணையை விமர்சித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறித்தும் கேள்வி எழுந்தது.
“வீடியோவில் நீதித்துறையை கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். அதற்கு என்ன பதில்?” என நீதிபதி கேட்டார். அதற்கு வாஞ்சிநாதன், “ஏற்கனவே நீங்கள் கேட்டதற்கு பதில் அளித்துள்ளேன். நீங்கள் வீடியோவை ஒளிபரப்பி அதை அடிப்படையாக வைத்து கேட்கிறீர்கள். வீடியோவில் மாற்றங்கள் செய்ய முடியும். அது வழக்குக்கு தொடர்பில்லாதது. தலைப்புக்கு நான் பொறுப்பல்ல. எழுத்து மூலம் கேட்டால் பதிலளிக்கிறேன். மேலும், என் மீது நீங்கள் விசாரணை நடத்த முடியாது” எனக் கூறினார்.
இதற்கு நீதிபதி பதிலளிக்கையில், “நாங்கள் உங்கள் குற்றச்சாட்டைப் பற்றியே விசாரிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் செய்த குற்றச்சாட்டை இப்போது மீண்டும் உறுதிப்படுத்துகிறீர்களா என்பதே எங்களது கேள்வி. உங்கள் பின்னால் நின்றவர்கள், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது எனப் பேசுவது சரியல்ல.
என் தீர்ப்புகளை விமர்சிக்க உங்கள் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், சாதி பார்வையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறுவது வேறுபட்டது. அதை ஏற்க முடியாது. யாராலும் நீதித்துறை செயல்பாட்டில் தலையிட முடியாது. உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுத்ததுக்கும், இங்குள்ள விசாரணைக்கும் சம்பந்தமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளீர்கள். அவை 50க்கும் மேற்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் என் மீது சாதிப் பாகுபாடுடன் நடந்துகொள்கிறார் என கூறியுள்ளீர்கள். அது உண்மை எனில் நீதிமன்ற அவமதிப்பு. அதற்கு உங்கள் பதில் என்ன?” எனக் கேட்டார்.
வாஞ்சிநாதன், “எழுத்து மூலம் கேட்டால் பதிலளிக்க தயார்” எனக் கூறினார். அதற்கு நீதிபதி, “வாய்மொழியாக கூறினால் போதும். பதிலளிக்க தயங்குவது ஏன்?” என கேட்டார்.
பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
வாஞ்சிநாதன், தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தை முதல்வருக்கு மாற்றிய சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவையும், மேலும் பொதுமக்கள் முன் நீதித்துறையை விமர்சித்த பேச்சுகளையும் வெளியிட்டுள்ளார்.
முந்தைய விசாரணையில் இதைப் பற்றிய விளக்கம் அளிக்குமாறு அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதிகள் இதற்கு தலைமை நீதிபதி தலையிட வேண்டும் எனக் கோரியிருக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரியது. இன்றும் வாஞ்சிநாதன் தெளிவான பதிலை வழங்கவில்லை. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.