அரசியல் சாசன உரிமைகள் இதர பிற்படுத்தப்பட்டோரிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை – ரத்தின சபாபதி கருத்து

“அரசியல் சாசன உரிமைகள் இதர பிற்படுத்தப்பட்டோரிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை” – ‘ஓபிசி ரைட்ஸ்’ தலைவர் ரத்தின சபாபதி கருத்து

இந்திய அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினருக்கு இதுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை என ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக செயல்படும் கூட்டமைப்பும் ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பும் இணைந்து ஈரோட்டில் நேற்று இளையோர் விழாவை நடத்தின. இதில் கலந்து கொண்டு பேசினார் அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி.

அவர் கூறியதாவது:

இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்படும் போதே நடந்த விவாதங்களில், பல தலைமுறைகளாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்திலும் அனைத்து சமூகத்தினரும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பது அப்போது எடுத்த முடிவு.

அந்தக் காலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியிருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காக இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனம் உரிமை அளித்தது. ஆனால், அந்த உரிமை கடந்த 42 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை.

பின்னர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி, பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தினார். இருப்பினும், அரசியல் சாசனம் அளித்த முழுமையான உரிமைகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் 26 சமூகங்களைச் சேர்ந்தவர்களில், இன்று வரை ஒருவர் கூட அரசு பணியில் சேர்ந்திருப்பது இல்லையென்பது அந்தப் புறக்கணிப்பிற்கு சாட்சி. எந்த அரசியல் கட்சியும் இதை பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எங்கு, எந்த வகை கல்வி கற்கலாம், கல்விக் கடன், வேலை வாய்ப்பு ஆகியவற்றை பற்றிய முழுமையான வழிகாட்டுதல்களை ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பு வழங்கி வருகிறது. obcrights.org இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் இந்த உதவிகளைப் பெறலாம்.

எந்தவொரு கட்சி சார்பும் இல்லாமல் மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தி, அவர்களது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து, நிரந்தர முன்னேற்றத்துக்கான முயற்சிகளை எங்கள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது என அவர் கூறினார்.

பின்னர், மாணவர் உரிமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மருத்துவம், சட்டம், பொறியியல், கலைக் கல்வி போன்ற துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து சிறப்பு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, தொழிலதிபர் ரபீக், ஓபிசி ரைட்ஸ் அமைப்பின் துணைத் தலைவர் வெள்ளிங்கிரி, ஈரோடு மாவட்டத் தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Facebook Comments Box