ராமேசுவரம் நினைவிடத்தில் அப்துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, ராமேசுவரத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியிலிருந்த கலாம், தனது பதவிக்காலத்துக்குப் பிறகும் நாட்டின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பேசி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வந்தார். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மேகாலயாவின் ஷில்லாங் நகரில் உள்ள கல்வி நிறுவன விழாவில் உரையாற்றியபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரின் 10-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் நினைவுகூரப்பட்டது. ராமேசுவரம் பேக்கரும்புவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அவரது சகோதரர் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா உள்ளிட்ட குடும்பத்தினர் இஸ்லாமிய மரபின்படி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில், ராமேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது நாசர், பாஜக தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பல்வேறு சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர், இஸ்ரோ தலைவர் நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வட்டாட்சியர் அப்துல் ஜபார் உள்ளிட்டோர் கலாமின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் தலைவர்களின் புகழஞ்சலி:
அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி பல அரசியல் தலைவர்களும் அவரை போற்றிப் புகழாரம் சூட்டினர். அவர்களது அறிக்கைகளில் கூறியிருப்பது வருமாறு:
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “எளிமையான குடும்பத்தில் பிறந்து உலகமெங்கும் மதிப்பைப் பெற்ற மாமனிதராக விளங்கிய கலாமின் நினைவு நாளில் அவரை வணங்கி பெருமைப்படுகிறேன். அவர் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.”
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: “உலக அரங்கில் இந்தியா ஒரு பெரிய சக்தியாக வளர காரணமாக இருந்த கலாமின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கின்றன. அவரை நினைவுகூர்ந்து கௌரவிப்போம்.”
இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட பலரும் டாக்டர் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.