திமுக ஆட்சியில் வருமானமும், மத்திய அரசின் பங்களிப்பும் அதிகம் – எடப்பாடி பழனிசாமி

“திமுக ஆட்சியில் வருமானமும், மத்திய அரசின் பங்களிப்பும் அதிகம்” – எடப்பாடி பழனிசாமி

“தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனதளவில், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்துள்ளது; மத்திய அரசு வழங்கிய ஒத்துழைப்பும் பெரிது” எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மக்களை பாதுகாப்போம் – தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன், திமுக அரசைத் தோற்கடிக்க 7.7.2025 அன்று கோவையில் ஆரம்பித்த எழுச்சிப் பயணத்திற்குத் திரும்பத் திரும்ப பேராதரவு அளித்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஜூலை 7ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து இந்த எழுச்சிப் பயணத்தை துவங்கி, ஜூலை 25ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியுடன் நிறைவு செய்தேன். 10 மாவட்டங்கள், 46 சட்டமன்றத் தொகுதிகளில், சுமார் 18.5 லட்சம் மக்களை நேரில் சந்தித்தேன். அவர்களது குறைகளை கேட்டேன், மனநிலையை புரிந்துகொண்டேன். அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை வழங்க உறுதியளித்தேன்.

திமுக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளுடன் ஆட்சி செய்துள்ள அரசியல்வாதிகளால் மக்கள் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்து வருவதாக கூறினர். பொய்மையான பேச்சுகள், புகைப்படக் காட்சிகள், விளம்பர செலவுகள் தான் திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. அவர்களது நாடகங்களை நாங்கள் நம்பவில்லை. மக்களே விழிப்புடன் உள்ளனர்.

திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன. அரசு செலவில் தந்தையின் பெயரில் திட்டங்கள், எங்கும் கருணாநிதி சிலைகள், மகனை துணை முதல்வராக நியமித்தல் ஆகியவையே இவர்களின் சாதனைகள். தற்போது ‘பெயருக்காக’ திட்டங்கள் அறிவித்து, அரசுப் பணத்தில் சொந்த பெயரை விளம்பரப்படுத்துகிறார் ஸ்டாலின்.

டெண்டர் விட்டு இல்லாமல் ₹22 கோடி செலவில் இரண்டு விளம்பர நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலை; பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாத அரசு. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்து, சட்ட ஒழுங்கு தடுமாறுகிறது. போதைப்பொருள் பயன்பாட்டால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

திமுக 525 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தையும் நிறைவேற்றவில்லை, ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர். பொதுமக்கள் வீடே கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது; கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் ஒருவரையொருவர் பாதுகாக்க வேண்டிய நிலை. காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை.

புயல், வெள்ளம் வந்தால் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நேரில் சென்று குறைகளை கேட்பதும் இல்லை. ஸ்டாலின் ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். திமுகவினர் வாக்கு கேட்க சென்றால் மக்கள் அவர்களை விரட்டுகின்றனர். இந்தக் கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் கோருகிறார்கள். தாலிக்குத் தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பெண்கள் விரும்புகிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை பற்றி பல மாதங்கள் பொய்யாகக் கூறிய ஸ்டாலின் அரசு, எங்கள் அழுத்தத்திற்குப் பிறகே திட்டத்தை அறிவித்தது. இதுவரை ₹23,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தையும் மக்கள் குற்றச்சாட்டினர். மீண்டும் அதிகாரத்தில் வந்ததும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தேன்.

தனிநபர் வருமானத்தில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற தமிழ்நாடு, அதிமுக ஆட்சியின் தொடர்ச்சிதான், ஸ்டாலின் ஆட்சியின் சாதனை அல்ல. கடுமையான வறட்சி, புயல்கள், கொரோனா போன்ற அவலங்களில் கூட நிதியை சீராக நிர்வகித்தோம்.

தற்போது வருமானம் அதிகம், மத்திய அரசின் உதவியும் அதிகம். கடனாகவும் அதிக நிதி பெற்றுள்ளனர். ஆனாலும் எந்த பெரிய திட்டமும் இல்லை. விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நிர்வாகம் திருப்திகரமாக இல்லை. திமுக ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டதாக பிரசாரம் செய்ய முயற்சிக்கின்றனர். உண்மையில், அதிமுக ஆட்சியிலேயே இவ்வளவு வளர்ச்சிக்கு விதை விதைக்கப்பட்டது.

“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற தலைப்பில் புதிய பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளோம். திமுக ஆட்சியின் செயலிழப்புகளை மக்கள் ரிப்போர்ட் கார்டாக நிரப்பி வழங்குவார்கள். பொய்யான வாக்குறுதிகள், திறனற்ற ஆட்சியை மக்கள் கண்டுணர்ந்துள்ளனர். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்கள் முழுமையாகக் காத்திருக்கின்றனர்.

மக்களின் மனநிலை திமுகவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டது. மக்களின் கண்களில் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்ற ஆர்வத்தைப் பார்த்தேன். இந்தக் கொடுமை ஆட்சி மக்களின் கண்ணீரால் அழிக்கப்படும். வள்ளுவர் கூறும் வாக்குப்படி, தீமை செய்யும் ஆட்சியை மக்கள் மாற்றுவார்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத, பொய்கள் கூறும் ஸ்டாலின் அரசை தோற்கடிப்போம். குடும்ப அரசியல், வாரிசு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். எனது எழுச்சிப் பயணம் தொடர்ந்து நடைபெறும். மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் வரை ஓய்வதில்லை. மக்களை காப்போம்! தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்!” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box