“தமிழக மக்களுக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கும் வரை விடாமுயற்சி தொடரும்” – பழனிசாமி உறுதி

“தமிழக மக்களுக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கும் வரை விடாமுயற்சி தொடரும்” – பழனிசாமி உறுதி

“தமிழக மக்களுக்கு நேர்மை நிறைந்த ஆட்சியை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“மக்களைக் காக்க – தமிழ்நாட்டை மீட்க” என்ற பேரணியின் மூலம், நான்கு மாதங்களில் சுமார் 18.5 லட்சம் மக்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன். மக்கள் நேரில் கூறிய குறைகள், வேதனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எனக்கு நன்கு புரிந்தன.

திமுக ஆட்சியில் மக்களைப் பாதுகாக்கும் திறன் இல்லை என்பதை பொதுமக்கள் அதிக அளவில் உணர்ந்துள்ளனர். பெண்கள், சிறார்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். குற்றங்களை கட்டுப்படுத்தும் திறனற்ற ஆட்சி இது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

போலீசாருக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலை உள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் கடும் வருத்தம் மற்றும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நல்லாட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியும் அவர்கள் தெரிவித்தனர்.

தாலிக்குத் தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பட்டுச் சேலையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆட்சி வந்த பிறகு மட்டுமே வழங்கப்பட்டது என்பதை பெண்கள் குறை கூறினர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொகை அதிகரிக்கப்படும் என்ற தகவல் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

தற்போது, ‘திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் – உண்மைக்கும் உரிமைக்கும் ஆதரவு’ என்ற புதிய பிரச்சார இயக்கம் அதிமுகவினால் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் மோசமான செயல்பாடுகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகள் குறித்து மக்கள் ரிப்போர்ட் கார்ட் மூலம் பதிலளிக்கின்றனர்.

திமுக ஆட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தீவிரமாகியுள்ளது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எனது எழுச்சி பயணம் தொடரும். தமிழ்நாட்டில் மக்களுக்கு நலமிக்க ஆட்சி கிடைக்கும் வரை நான் ஓயாது போராடுவேன்.”

Facebook Comments Box