கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தமிழக அரசு விரைவில் நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தன்னுடைய அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கத்தக்க போட்டித் தேர்வுகள் ஜூலை மாதத்திற்குள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடைபெறாமல் போனது, இந்த அரசின் செயலிழப்பைக் காட்டுகிறது. இதன் மூலம் ஒரு பேராசிரியரையும் நியமிக்க முடியாத நிலையில் திமுக அரசு சிறுமை அடைந்துள்ளது.

தங்கள் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் பல ஆயிரம் இளைஞர்கள் மற்றும் கல்வித்தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 4,000 பேராசிரியர்களை நியமிப்பதாக அறிவித்தும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

2024 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஜூன் மாதத்தில் தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 4 ஆகஸ்ட் 2024 அன்று தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், தற்போது வரை தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது ஜூலை மாதம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன, தேர்வுக்கான தேதியே கூட அறிவிக்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் கூட இந்தத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குரிய முன்னேற்பாடுகள் எதுவும் இல்லை என்பது காணப்படுகிறது.

இது இரண்டு வகையான பாதிப்புகளை உருவாக்குகிறது:

  1. கல்வித் தகுதி பெற்ற, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் குழப்பமடைகிறது. 2013 ஆம் ஆண்டு மே 28ம் தேதியில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் எந்த உதவிப் பேராசிரியர் நியமனமும் நடைபெறவில்லை.
  2. கல்லூரிகளில் படிக்கும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கான நிலையான உதவிப் பேராசிரியர்கள் இல்லை. தற்போது 90% பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

இந்த நிலையில், திமுக அரசு உயர்கல்வித் துறையை நிர்வாக ரீதியாக இழுத்து நிறுத்தி விட்டதாகவே பார்க்கப்படுகிறது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்திய விடுதலைக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மிக மோசமான உயர்கல்வி நிர்வாகத்தை அளித்துள்ளது.

அதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்யும் வகையில், உடனடியாக 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Facebook Comments Box