சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சைலேந்திர சிங் பதவியேற்பு
சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளராக (Divisional Railway Manager – டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளராகப் பணியாற்றிய விஸ்வநாத் ஈர்யா மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது இடத்துக்கு சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
1995-ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ரயில்வே சிக்னலிங் சேவையின் (IRSE) அதிகாரியான சைலேந்திர சிங், ரயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வளமான அனுபவம் கொண்டவர். இவர் இதற்கு முன்னர் சிக்கந்திராபாத் கோட்டத்தில் கூடுதல் கோட்ட மேலாளராகவும், ரயில் டெல் நிறுவனத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ரயில்வே சிக்னலிங் அமைப்புகளின் சோதனை, செயல்படுத்தல் மற்றும் திட்ட பொறியியல் போன்ற துறைகளில் சிறப்பு பங்களிப்பு வழங்கியுள்ள சைலேந்திர சிங், ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.