கடலூர் நகராட்சியின் குப்பை வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிப்பு: அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்
கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத் தேர்தலுக்கான பொருட்களும் வாக்காளர் அடையாள அட்டைகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகம் எண் 3 – இதில் துப்புரவு பணியாளர்களின் வருகையை பதிவு செய்யும் இடம் உள்ளது. அந்த அலுவலக வாசலில் ஜூலை 29ம் தேதி மாலை குப்பை சேகரிக்கும் மின்சார மூன்று சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த நாள் (ஜூலை 30) காலை, துப்புரவு பணியாளரும் வண்டி ஓட்டுநருமான காமாட்சி (வயது 38) அந்த வண்டியை இயக்கும்போது, வண்டியின் வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும், குப்பை போடும் பாகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 48 வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தும் மை, தேர்தல் பணியாளர்கள் அடையாள பேட்ஜ்கள், மற்றும் தேர்தலில் பயன்படும் பிற பொருட்கள் இருந்தன.
இதற்கான தகவல் உடனடியாக கடலூர் வட்டாட்சியர் மகேஷிடம் சென்றது. அவர் உடனே மஞ்சக்குப்பம் வருவாய் ஆய்வாளருடன் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த வாகனத்தில் இருந்த தேர்தல் தொடர்பான பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார்.
இவற்றை அந்த குப்பை வண்டியில் யார் வைத்து சென்றார்கள் என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.