1967, 1977 தோ்தல்களைப் போலவே 2026 தோ்தலும் அமையப்போகிறது: தவெகத் தலைவா் விஜய்

1967, 1977 தோ்தல்களைப் போலவே 2026 தோ்தலும் அமையப்போகிறது: தவெகத் தலைவா் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினா் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது. இதனை கட்சித் தலைவா் விஜய் இன்று அறிமுகம் செய்தாா். இந்த நிகழ்வில் தவெக மாநில மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியின் போது விஜய் உரையாற்றியதாவது: தமிழக அரசியலுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய இரண்டு முக்கியமான தோ்தல்கள் – 1967, 1977. அந்த இரண்டிலும், பல வருடங்களாக ஆட்சியில் இருந்த சக்தி, மிகுந்த அதிகாரம் கொண்ட அமைப்புகள் எல்லாவற்றையும் எதிர்த்துப் புதிதாக மேடைக்கு வந்தவர்கள் வெற்றி பெற்றனா். அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்தனா் – ஊருக்கு ஊா், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு எனச் சென்றனா்.

அண்ணா கூறியதைப் போலவே, “மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக் கொள், மக்களோடு வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு” என்பதே நானும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இந்த அடிப்படையை நன்கு பின்பற்றினாலே வெற்றி உறுதி. அந்த நோக்கத்திலேயே இந்த செயலியை அறிமுகப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதன் பின், மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு மற்றும் பயணங்கள் என அனைத்தும் மக்களோடு நெருக்கமாகவே அமையும். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு உறுதி உண்டு. நன்றாக எண்ணுவோம்; நன்மையே நிகழும். நிச்சயமாக வெற்றி நம்மைத் தேடி வரும்,” என அவர் தெரிவித்தாா்.

முன்னதாக, ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட செயலியை வெளியிட்ட விஜய், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினருக்குத் தவெக உறுப்பினர் அட்டைகளை வழங்கி கவுரவித்தாா்.

Facebook Comments Box