பிரதமர் மோடி ஆகஸ்ட் 26ல் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 26ஆம் தேதி அவர் இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்திருந்தார். அப்போது தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அன்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடியை அங்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர், ஜூலை 27ஆம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பிரதமர், பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற ராஜராஜ சோழர் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த பயணத்தின் போது, அவர் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலும் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். கோயில் தரிசனங்களை முடித்த பின்னர், சிதம்பரத்தில் நடைபெறும் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.