கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வுக்குழு அமைப்பு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தகவல்

கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வுக்குழு அமைப்பு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தகவல்

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கடைகளுக்கான உரிமம் தொடர்பான தற்போதைய சட்டங்களை மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்தியில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டில் வணிக உரிமங்கள் எண்ணிக்கை 85,649 இருந்த நிலையில், பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 2020-21ஆம் ஆண்டில் அது 2,05,100 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில், உரிமக் கட்டணம் ரூ.5.40 கோடியில் இருந்து ரூ.12.90 கோடியாக உயர்ந்தது” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊராட்சி வாரியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டபின்னர், இப்போது திமுக அரசை பழனிசாமி விமர்சிப்பது, அவரது இரட்டை முகத்தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

கிராமப்புற ஊராட்சிகளில் பல்வேறு வணிகத் தொழில்கள் ‘ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் இவை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. இதன் வாயிலாக ஊராட்சிகள் வரி வருமானம் பெற்றன.

ஆனால், தெளிவான சட்டங்கள் இல்லாததால், ஊராட்சிகள் தங்கள் முடிவுகளின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து அதிகமாக வசூலித்தன. இந்த குறைகளை நீக்கவும், வணிகர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளை ஏற்கவும், தற்போது புதிய விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகள் பல நன்மைகளை கொண்டுள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிக உரிமம் பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதலவரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்ள விவரங்களை பரிசீலிக்க, துறை அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு, கிராமப்புறங்களில் சிறிய வணிகர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை எளிதாக்க என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டம் செயல்படுத்தப்படுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

Facebook Comments Box