கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்திபத்மநாபன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தின் போது இவர், சசிகலா, டிடிவி தினகரன் அணியில் இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து, இவருடன் சேர்த்து 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயந்திபத்மநாபன் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தர உள்ளதையொட்டி ஜெயந்திபத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரத்திடம் மனு அளித்துள்ளார். அதில், சசிகலா தமிழகம் வருவதையொட்டி, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன். அதற்காக பிப்ரவரி 7-ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை வரவேற்க அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த கடிதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் அலுவலகத்துக்கு ஆட்சியர் பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Facebook Comments Box