மன்னிப்பு கடிதம் கொடுத்தால் டிடிவி தினகரனை கட்சியின் இணைத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் கருத்தாகாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், நீதிமன்றம் சென்றாலோ, மாற்று கட்சிக்கு சென்றாலோ அதிமுக சட்ட விதிகளின் படி தானாகவே அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் பறிபோய்விடும் என்றார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறதா என்பது பற்றி தெரியாது என்ற அவர், அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். நளினியை தவிர வேறு யாரையும் விடுதலை செய்ய கூடாது என திமுக கூறியது.
இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. டிடிவி தினகரன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் அளித்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும் என கே.பி முனுசாமி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து எனவும், கட்சி அறிக்கையின் மூலம் வெளியாகும் தகவலே உண்மையான கருத்தாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் தினகரன் எப்படி அதிமுக அனுதாபியாக இருக்க முடியும் எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு விதித்துள்ள மதிப்பு கூட்டு வரி மிகவும் குறைவு, செஸ் வரி உயர்ந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Facebook Comments Box