அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின், தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில்,‘ கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.. மேற்கு பறவழிசசாலை திட்டத்தைவிரைவாக நிறைவேற்ற வேண்டும்,’’என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறுகையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சமீபத்தில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அனைத்து மக்களுக்கான கட்சி. தமிழகம் முழவதும் எங்கள் கட்சி உள்ளது.
1996-ல் திமுக ஆட்சியை பிடிக்க நானும் ஒரு முக்கிய காரணம். ஆனால், திமுக எனக்கு துரோகம் செய்துவிட்டதாக நான் கூறவில்லை. நான் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. எங்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தான் நீடிக்கிறது.
அதிமுக சார்பில் இன்னும் கூட்டணி குறித்து எங்களிடம் பேசவில்லை. கூட்டணி குறித்து பேசும் பொழுது தான் எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ஒன்று, இரண்டு இடங்களில் போட்டியிட மாட்டோம்.
அதிக இடங்களில் தான் போட்டியிடுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியில் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு நேரடி உதவிகள் எதுவும் இல்லை. ஆனால், மறைமுக உதவிகள் உள்ளன. வேல்-ஐ கையில் பிடித்துக் கொள்வது தற்போது பேஷன் ஆகிவிட்டது, “என்றார்.
கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தனி சின்னத்தில் தான் போட்டியிட சரத்குமார் திட்டவட்டம் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box