மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து 28-ம் தேதி மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறந்து வைக்கப்படுகிறது. அதோடு மாநில உயர்கல்வி மன்ற வளாகம், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
இந்த விழாவில் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள மாநிலக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் சேலை அணிந்து பங்கேற்க வேண்டும் என்று அந்தந்த கல்லூரிகளின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ‘ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் 2 பேராசிரியைகள் மாணவிகளை அழைத்து வரும் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். கரோனா தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போது வருகைப் பதிவேடும் எடுக்கப்படும்’ என்று மாநிலக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, ராணி மேரி அரசு மகளிர் கல்லூரி பாரதி அரசு மகளிர் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவிகள் ஜெயலலிதாவின் படம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்து சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் கல்லூரி மாணவிகளுக்கு உத்தரவு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box