தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை 7 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்ய காவல் துறையினர் 10 தனிப்படைகளை உடனடியாக அமைத்தனர்.
8 பேர் கைது: கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலையாளிகளை போலீஸார் தேடி வந்த நிலையில், 8 பேர் இரவு அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராகு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெரம்பூர் செம்பியம் பிஎஸ் எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் முன் விரோதம் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார்.
அஸ்ரா கார்க் பேட்டி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றம் நடந்த சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”8 பேரை கைது செய்துள்ளோம். முதல் கட்ட விசாரணை நடந்து வருவதால், மற்ற விவரங்களை வெளியிட முடியாது. விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக ஒரு பெரிய வீடு கட்டி வருகிறார். இதனால், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டி வரும் புதிய வீட்டின் அருகே நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களுடன் பேசி வருகிறார்.
பைக்கில் வந்த 6 பேர்: அப்படி, நேற்று இரவு 7 மணியளவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியது. இதில் ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அலறியடித்தபடி கீழே விழுந்தார். உடன் இருந்த நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் பாலாஜிக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
8 சரண்: கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அதன்பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் 6 பேரும் உணவு வழங்கும் தொழிலாளர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். அவர்களை பிடிக்க சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.
Discussion about this post