வெற்றிகரமாக தரையிறங்கிய டிராகன்: பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

வெற்றிகரமாக தரையிறங்கிய டிராகன்: பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குப் பின் வந்துள்ளார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. இந்த சாதனையோடு நிறைந்த பயணம், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக அமையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ இணைந்து செயல்படுத்திய திட்டமே ஆக்சியம்-4.

இந்த திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் மிஷன் கட்டுப்பாட்டாளர் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் கடந்த ஜூன் 25ம் தேதி பல சவால்களை எதிர்கொண்டபடியே சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த டிராகன் க்ரூஸ் விண்கலத்தினை ஏந்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் வானத்தைச் சீறி பாய்ந்தது. 28 மணி நேரப் பின்பு அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

ஜூன் 26ம் தேதியே விண்வெளி நிலையத்தில் கால் வைத்த அந்த குழுவினர், அங்கு 15 நாட்கள், மொத்தம் 433 மணி நேரங்கள் தங்கியிருந்தனர். பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட ஆக்சியம்-4 குழு, 122 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து, பூமியை 288 முறை சுற்றியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் பயிர்கள் எப்படி வளர்கின்றன என்பதைக் கண்காணிக்க, வெந்தயம் மற்றும் பச்சைப் பயறு விதைகளை எடுத்துச் சென்று ஆராய்ச்சி செய்தார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை அன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆக்சியம்-4 குழுவினர் டிராகன் க்ரூஸ் விண்கலத்தின் மூலம் பூமி நோக்கிப் புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்கு பின்னர், மணி நேரத்திற்கு 17,000 கிலோமீட்டர் வேகத்தில் கீழிறங்கத் தொடங்கிய டிராகன் க்ரூஸ் விண்கலம், ‘ஸ்பிளாஷ் டவுன்’ எனப்படும் முறையில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

கடலில் மிதந்த அந்த விண்கலத்தை அமெரிக்கக் கடற்படை மீட்டு கரை நோக்கி கொண்டு வந்தது. அதன் பிறகு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரும் முறையே விண்கலத்திலிருந்து வெளியேறி கை அசைத்தனர். தனது மகன் வெளியில் வருவதை காணும் தருணத்தில் சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் சந்தோஷக் கண்ணீரில் மூழ்கினர்.

அந்த நான்கு வீரர்களுக்கும் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புவியின் ஈர்ப்பு விசையை மீண்டும் உணர, 7 நாட்கள் விசேஷ சிகிச்சை மையத்தில் அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது, இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை மனமார்ந்த வரவேற்பதாகும். சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த முதல் இந்திய விண்வெளி வீரராக, அவரது தன்னலமற்ற முயற்சி, துணிச்சலும் முன்னோடி ஆளுமையும் 100 கோடி இந்தியர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியான பயணம், இஸ்ரோவின் 2027ஆம் ஆண்டு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ஒரு பெரும் முன்னேற்றமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Facebook Comments Box