ரேடாரில் காணாத INS உதயகிரி – இந்தியக் கடற்படையில் புதிய சேர்ப்பு!
முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 100வது ஸ்டெல்த் வகை போர்க்கப்பலான INS உதயகிரி, கட்டுமானம் தொடங்கிய 37 மாதங்களுக்குள், இந்தியக் கடற்படையின் பணிக்குள் கொண்டு வரப்பட்டது. இது பலதரப்பட்ட கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்படக் கூடிய திறனை பெற்றுள்ளது. இக்கப்பல் குறித்த செய்தி தொகுப்பு பின்வருமாறு:
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின், இந்தியா தனது கடற்படை சக்தியைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர்க்கப்பல்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. PROJECT 17A திட்டம், தற்போதைய சிவாலிக் வகை கப்பல்களின் வளர்ச்சி வடிவமாகும்.
P-17A திட்டத்தின்கீழ் கட்டப்படும் போர்க் கப்பல்கள், செங்குத்து ஏவுதள அமைப்புகள் (VLS) மூலம் தரையிலிருந்து வான் ஏவுகணைகளை செலுத்தும் சிறப்பம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நவீன கப்பல்கள், மும்பை மசகான் டாக் ஷிபில் (MDSL) மற்றும் கொல்கத்தா கார்டன் ரீச் ஷிபில் (GRSE) கட்டப்படுகின்றன.
உயர்தர ஸ்டெல்த் தொழில்நுட்பங்களுடன் உருவாகும் ஏழு P-17A போர்க் கப்பல்களில், INS உதயகிரி இரண்டாவது கப்பலாக உள்ளது. இது, முந்தைய நீராவி இயந்திரம் கொண்ட INS உதயகிரியின் நவீன வடிவமாகும். பழைய கப்பல் 31 ஆண்டுகள் சேவையாற்றி, 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெறப்பட்டது.
P-17A வகை கப்பல்கள், மேம்பட்ட ரேடார்கள் கண்டறிய இயலாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. INS உதயகிரி, Project 17 கப்பல்களைவிட 4.54% அதிக அளவுடையதாகவும், மேம்பட்ட அம்சங்களுடன் கொண்டதாகவும் இருக்கிறது.
இந்தக் கப்பலில் ஒருங்கிணைந்த டீசல் அல்லது எரிவாயு உந்துவிசை (CODOG) அமைப்பு, அதிநவீன தள மேலாண்மை அமைப்பு (IPMS) மற்றும் Controllable Pitch Propeller ஆகியவை உள்ளன.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தக் கப்பலில் சூப்பர்சோனிக் மேற்பரப்பு ஏவுகணை அமைப்புகள், நடுத்தர தூர வான் ஏவுகணைகள், 76 மில்லிமீட்டர் துப்பாக்கி, 30 மற்றும் 12.7 மில்லிமீட்டர் வேகமான நெருக்கம் கொண்ட ஆயுத அமைப்புகள் உள்ளன.
இந்தப் பல்நோக்கு போர்க் கப்பல்கள், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மரபு சார்ந்த மற்றும் இன்றைய கடல் அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
INS உதயகிரி, சுயநிறைவு பெற்ற பாரதத்தின் அடையாளமாக விளங்குகிறது. இதில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டவை.
இந்தக் கப்பலின் கட்டுமானத்தில் 200-க்கும் மேற்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் நேரடியாக 10,000 பேருக்கும், மறைமுகமாக 4,000 பேருக்கும் வேலைவாய்ப்பு உருவானது.
மீதமுள்ள ஐந்து ஸ்டெல்த் வகை போர்க் கப்பல்களும் கட்டுமானத்தின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இவை அனைத்தும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் போர் கப்பல் வடிவமைப்பு பணியகம், விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள், மற்றும் பிற அதிநவீன போர்க் கப்பல்களை உருவாக்கும் முக்கிய உள் அமைப்பாக செயல்படுகிறது.
INS உதயகிரி, இந்தியாவின் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறனுக்கு ஒரு நீண்ட அடையாளமாக நிற்கிறது.