வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கன்-9 ராக்கெட்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் பயணம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கன்-9 ராக்கெட்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் பயணம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாசாவின் கென்னடி விண்வெளி மையம் (Kennedy Space Center), புளோரிடா மாநிலத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட், ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நான்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டது. இந்த குழுவில் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் பங்கேற்றுள்ளனர். ஆனால் கடந்த வாரங்களில் ஏற்பட்ட மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த மிஷன் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வானிலை 90 சதவீதம் சாதகமாக இருந்ததால், நாசா தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதன் பேரில், இந்திய நேரப்படி மதியம் 12:01 மணிக்கு, புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்தில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் விண்வெளிக்குப் பறந்தது.

ராக்கெட் பயணத் தகவல்:

  • வெளிவளவிற்கு சென்றவுடன், ராக்கெட்டில் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம், அதன் முக்கிய கட்டத்திலிருந்து பிரிந்து விடும்.
  • பிறகு, விண்வெளியை அடைந்து, பூமியைச் சுற்றும் வட்ட பாதையில் செல்லும் என நாசா அறிவித்துள்ளது.
  • நாளை மாலை 4:30 மணிக்கு, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சிக்கான 14 நாள் பயணம்:

இந்த பயணத்தில் பங்கேற்கும் நான்கு விண்வெளி வீரர்களும் 14 நாட்கள் வரை விண்வெளி நிலையத்தில் தங்கி அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆராய்ச்சி நிகழ்ச்சியில் மொத்தம் 60 வகையான விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுபான்ஷு சுக்லா, தனிப்பட்ட முறையில் விண்வெளியில் ஆக்ஸிஜனும் நீரும் இல்லாத சூழலில் செடிகள் மற்றும் பயிர்கள் வளர்ச்சி பெறும் விதம் தொடர்பான முக்கிய ஆய்வில் ஈடுபட உள்ளார் என நாசா தெரிவித்துள்ளது.


இந்த திட்டத்தின் வெற்றிகரமான தொடக்கம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box