AI மென்பொருள் பொறியாளர்களை சேர்க்கும் திட்டத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்!
AI துறையில் தங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் பொறியாளர்களை பணியில் இணைக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
1869ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகப்பிரசித்தி பெற்ற முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், 2023 முதல் வருவாயை பொருத்தவரை உலகின் இரண்டாவது பெரிய முதலீட்டு நிறுவனமாக திகழ்கிறது.
தற்போது, லண்டனை மையமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI மென்பொருள் பொறியாளர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும், இது வங்கியின் உற்பத்தி செயல்திறனை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் இடைவேளை அல்லது ஓய்வுத்தேவை இல்லாமல் செயல்பட முடியும், சம்பள உயர்வு அல்லது நிபந்தனை கோருவதும் கிடையாது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இத்தகைய AI பொறியாளர்களின் பயனாளர்மிக்க பரவலால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் சுமார் 2 இலட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கும் ஆபத்து உள்ளது என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.