ரேடாரில் தெரியாமல் இந்தியக் கடற்படையில் இணைந்த INS உதயகிரி!
முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 100வது ஸ்டெல்த் வகை போர் கப்பலான INS உதயகிரி, அதின் கட்டுமானம் துவங்கி 37 மாதங்களில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயன்பாடுகளுக்குத் தகுந்த இந்த போர் கப்பல், நாட்டுக்கு எதிரான கடல் வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக தடுக்க வல்லதாகும். இதுகுறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:
‘ஆபரேஷன் சிந்தூர்’ முடிந்த பின், இந்தியா தனது கடற்படை வல்லமையை அதிகரிக்க முனைந்தது. அதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவில் நவீன போர் கப்பல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், PROJECT 17A எனப்படும் திட்டம், தற்போது பயன்பாட்டில் உள்ள ‘சிவாலிக்’ வகை கப்பல்களின் தொடர்ச்சியாகும்.
P-17A என்பது, இந்தியக் கடற்படையில் செங்குத்து ஏவுதள (VLS) அமைப்புகளை பயன்படுத்தி நிலத்திலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை ஏவக்கூடிய முதற்கட்ட கப்பல்கள் ஆகும். இந்த வகை கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் ஷிப் யார்டும், கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸும் தயாரிக்கின்றன.
P-17A திட்டத்தில் உள்ள ஏழு கப்பல்களில் இரண்டாவது கப்பலாக INS உதயகிரி அமைந்துள்ளது. இது, முந்தைய INS உதயகிரியின் நவீன வடிவமாகும். அந்த நீராவி இயக்கக்கூடிய கப்பல் 31 ஆண்டுகள் சேவையில் இருந்து, 2007 ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெற்றது.
இந்த புதிய P-17A வகை கப்பல்கள், மேம்பட்ட ரேடார்களுக்கும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்படி ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, P-17 போர்க்கப்பல்களின் மேம்பட்ட வடிவமே ஆகும். INS உதயகிரி, P-17 கப்பல்களைக் காட்டிலும் சுமார் 4.54% அளவுக்கு பெரிதாகும்.
இந்த கப்பல் CODOG (Combined Diesel or Gas) எனப்படும் ஒருங்கிணைந்த டீசல் அல்லது எரிவாயு இயக்கம் கொண்ட உந்துவிசை அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. அதில் இன்றைய தொழில்நுட்பங்களான ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு (IPMS) மற்றும் வழிமாற்றக்கூடிய பிச்சு ப்ரொபெல்லர் (Controllable Pitch Propeller) உள்ளன.
மேலும், சூப்பர்சோனிக் நிலம் மேல் ஏவுகணை அமைப்பு, நடுத்தர தூர வான் ஏவுகணை அமைப்பு, 76 மில்லிமீட்டர் துப்பாக்கி, 30 மற்றும் 12.7 மில்லிமீட்டர் ரேபிட் ஃபயர் நெருக்கப் பாதுகாப்பு ஆயுதங்கள் ஆகியவையும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வகை மல்டி மிஷன் போர் கப்பல்கள், நாட்டின் கடல்சார் பாதுகாப்பு தேவைகளுக்குத் துணையாக இருப்பதோடு, மரபு சார்ந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
INS உதயகிரி, நாட்டின் கப்பல் வடிவமைப்பு, கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் திறன்களின் வெளிப்பாடாகும். இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலின் கட்டுமானத்தில் 200க்கும் அதிகமான சிறிய, நடுத்தர மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் நேரடியாக 10,000 பேருக்கும், மறைமுகமாக 4,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
மீதமுள்ள ஐந்து ஸ்டெல்த் போர்க் கப்பல்களும் தற்போது கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அவையும் முடிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் “போர்க் கப்பல் வடிவமைப்பு இயக்குநாயகம்”, விமானம் தாங்கும் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப போர்க் கப்பல்களை உருவாக்கும் அமைப்பாகும்.
இந்த வகை INS உதயகிரி போர் கப்பல், இந்தியா தனது போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் சுயநிறைவை அடைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் முக்கியச் சான்றாக உள்ளது.