நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாளத்தில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு எடுத்துள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை விதிமுறைகள் படி, நாட்டில் செயல்படும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, இந்த நிறுவனங்களுக்கு பதிவு செய்ய 7 நாட்கள் கால அளவு வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் முடிந்த பிறகு, 4-ஆம் தேதி பதிவு செய்யாத 26 வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பதிவு செய்யும் வரை தடை தொடரும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. தற்போது எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.
பேச்சுரிமை குறித்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. நேபாளத்தில் சில பேச்சுரிமை ஆர்வலர்கள், அரசு நடவடிக்கை மூலம் எதிர்ப்பு குரல்களை அடக்க முயற்சி செய்யப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க தவறியதாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு, 2008-ம் ஆண்டு மே மாதம், இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 239 ஆண்டுகளாக நிலவிய மன்னராட்சியை அகற்ற பல ஆண்டுகள் போராட்டம் நடைபெற்றது; அந்த போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர். தற்போது நடக்கும் ஆட்சியை பார்த்துப் பாராட்டும் மக்கள், முன்னொரு மன்னராட்சியே மேல் என்ற மனப்பாங்கில் இருப்பதாக தெரிகிறது.