ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனையில் வெற்றி – விரைவில் சந்தையில் அறிமுகம்

புற்றுநோய்க்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா, அதை விரைவில் சந்தையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அரசின் இறுதி அனுமதி கிடைத்ததும் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான உயிர்களை பறிக்கும் புற்றுநோயை தடுக்கும் நோக்கில், ரஷ்ய சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இதை முதன்முறையாக அறிவித்திருந்தார்.

மருத்துவ பரிசோதனைகளின் போது, புற்றுநோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், கட்டி (ட்யூமர்) வளர்ச்சியைத் தடுக்கவும், அதன் அளவை குறைக்கவும் முடிந்தது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மனிதர்களிடமும் பரிசோதிக்கப்பட்டதில், 100 சதவீத செயல்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு “என்ட்ரோமிக்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. முன்பு ரஷ்யா உருவாக்கிய எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசி அனுபவம், இதன் வெற்றிக்கு அடிப்படை அமைந்தது.

ரஷ்ய மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் அமைப்பின் தலைவர் வெரோனிகா, “புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கை தருகிறது” என தெரிவித்துள்ளார்.

இப்போது இந்த தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதி மட்டுமே நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்ததும், சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் மதிப்பீடு செய்யவுள்ளனர். இதனால் உலக மருத்துவ துறையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

சமீபத்தில் சீனாவுக்கு பயணித்தபோது, “மனிதர்கள் 150 ஆண்டுகள் வாழும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது” என்று ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box