அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு

2019-இல் இந்திய விமானி அபிநந்தனின் யுத்த விமானம் தாக்கப்பட்டு வீழ்ந்தபின் அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (வயது 37), சமீபத்தில் தலிபான் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார்.

தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா என்ற எல்லைப் பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மேஜர் ஷா செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது இறுதி மரியாதை நிகழ்வு, ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா காரிசான் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் நேரில் பங்கேற்றதாக பாகிஸ்தான் ராணுவ தகவல் பிரிவு (ISPR) தெரிவித்துள்ளது.

பிரார்த்தனை நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. “மேஜர் ஷா, எதிரியை நேரில் எதிர்கொண்டு மிகுந்த வீரத்துடன் போராடினார். அவர் நாட்டுப்பற்றும் தியாகத்தையும் எடுத்துக்காட்டி உயிர்துறந்தார்,” என முனீர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஷா, முழுமையான ராணுவ மரியாதையுடன் சமாதி இடப்பட்டதாகவும் ISPR குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவரது உயிரிழப்பிற்குப் பின், அபிநந்தனை பாகிஸ்தானில் கைது செய்ததும், வன்முறைக் குழுவிடமிருந்து காப்பாற்றியதும் இவரே என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box