இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம்… டொனால்டு ட்ரம்ப்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தொடர்பாக ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளார். இது, அந்த ஒப்பந்தம் நிறைவேறும் கட்டத்துக்குள் வந்துவிட்டதற்கான முக்கியக் குறியாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், “நாங்கள் மிகச்சிறந்த சில ஒப்பந்தங்களைச் செய்ய உள்ளோம். இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் உருவாக இருக்கிறது. சீனாவுடனான ஒப்பந்தத்தையும் ஆரம்பித்துள்ளோம். இதுவரை சாத்தியமாகவில்லை என்று கருதப்பட்ட விஷயங்கள் இப்போது சாத்தியமாகின்றன. ஒவ்வொரு நாட்டுடனும் நாங்கள் நல்லுறவில் இருக்கிறோம். சீனாவுடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எல்லா நாடுகளும் எங்களுடன் உள்ளனர். ஆனால், நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை. சில நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம். அவர்கள் 25%, 35%, 45% வரி செலுத்துவார்கள். அதுவே எங்களுக்கான எளிய தீர்வு. எனினும், எங்கள் அதிகாரிகள் ஒப்பந்தங்களை விரும்புகின்றனர். குறிப்பிட்ட சில நாடுகளுடன் மட்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க விரும்புகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் பயணம்:

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தும் குழுவின் தலைவர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு, ஜூன் 26ஆம் தேதி அமெரிக்கா சென்றுள்ளது. தற்போது அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றனர். வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளரான ராஜேஷ் அகர்வால், ஒப்பந்தத்தை ஜூலை 9ஆம் தேதிக்கு முன்னர் இறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

Facebook Comments Box