அமெரிக்கா புதிய விசா கட்டணம்: உயர்ந்த செலவுகள் மாணவர்கள், பயணிகள், தொழிலாளர்களுக்கு பெரும் தாக்கம்

மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணம், தற்போது ₹16,000-இல் இருந்து ₹40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை 2026 முதல் அமலில் வரும் என்றும், இக் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்க அளவுக்கேற்ப திருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய குடியுரிமை மற்றும் விசா சட்டங்களில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது பதவியேற்புக்குப் பிறகு பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இறக்குமதி வரி உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

இந்நிலையில், கடந்த ஜூலை 4-ம் தேதி, ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா’ என அழைக்கப்படும் சட்ட மசோதாவில் அவர் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக மாற்றியுள்ளார். அதன் மூலம், தொழில்முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விசா பெறும் போது, “பாதுகாப்பு வைப்பு தொகை” என்ற பெயரில் ஒரு கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

இந்தத் தொகை, குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால் மட்டுமே திருப்பி அளிக்கப்படும். குறிப்பாக, விசா காலாவதியானதும் உடனே அமெரிக்காவை விட்டு வெளியேறுவோர், மேலும் விசா நீட்டிக்க முயற்சி செய்யாதவர்கள், இந்த வைப்பு தொகையை மீண்டும் பெறுவதற்குத் தகுதி பெறுவர்.

இது வரை ₹16,000 மட்டுமே இருந்த எச்-1பி விசா கட்டணம், தற்போது ₹40,000 ஆக அதிபர் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வேலை தேடுவோர் ஆகியோருக்கு அதிகச் செலவுகளை ஏற்படுத்தும்.

இதில் தூதரக விசா பிரிவுகள் (A மற்றும் G) மட்டும்தான் விலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம், பி-1/பி-2 (சுற்றுலா மற்றும் வணிகம்), எஃப்/எம் (மாணவர்கள்), எச்-1பி (வேலைவாய்ப்பு) மற்றும் ஜே (பரிமாற்றப் பயன்பாடுகள்) என அனைத்து வகையான விசாக்களுக்கும் பொருந்தும்.

இந்த கூடுதல் கட்டணம், ஏற்கனவே உள்ள விசா விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்த்து, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறையால் விசா வழங்கும் தருணத்தில் வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box