20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

சவுதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் கலீத், சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலிருந்த பின், 36வது வயதில் உயிரிழந்துள்ளார் என்று அவரது தந்தை இளவரசர் கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அறிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள ராணுவப் பயிற்சி அகாடமியில் பயிலும் காலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இளவரசர் அல்வலீத் சிக்கினார். அந்தக் கடுமையான விபத்தில் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவ முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இதையடுத்து அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

விபத்தின் பிறகு, ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில், வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் ஒருசில அசைவுகளை காட்டிய போதிலும், உணர்வு நிலை எதிலும் மாற்றம் ஏற்படவில்லை.

இளவரசரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமே என்ற நம்பிக்கையில், அவரது தந்தை இளவரசர் கலீத், இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து உலகம் முழுவதிலுள்ள சிறந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும், இஸ்லாமிய பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டும் வந்தார். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அதிசயம் நடக்கவில்லை.

இருபதாண்டுகளாக சுயநினைவின்றி இருந்து வந்த இளவரசர், கடந்த சில நாள்களாக உடல் நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் உயிரிழந்தார். அவரது மரணம் சவுதி அரேபியாவில் மட்டுமின்றி, உலகத்துக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box