ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை – தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை – தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் கடலோரத்தில் உள்ள ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் உட்பட மொத்தம் மூன்று நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற 6.7 மற்றும் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள், கம்சட்கா மண்டலத் தலைமையகமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியின் கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலநடுக்கங்கள், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி கடற்கரையோரத்தில் 32 நிமிடத்திற்குள் தொடர்ந்து ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதன் பின், 7.4 ரிக்டர் அளவில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கியுள்ளது.

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரம், ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மற்றும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க நிலத்தகடுகள் சந்திக்கும் பகுதி என்பதால், இது நிலநடுக்கங்கள் அதிகம் நிகழும் ‘நில அதிர்வு சூடுப்பட்ட’ மண்டலமாக கருதப்படுகிறது.

1900ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் 8.3 ரிக்டர் அளவை விட அதிகமான ஏழு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 1952ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, இத்தீபகற்பத்தில் 9 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல்வேறு இடங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

Facebook Comments Box