பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

பாகிஸ்தானில், குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த கொடூரமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், அது நாட்டளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த இளம் ஜோடி, பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமுதாயத் தடையும் மீறி திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, பெண்ணின் சகோதரர், ஒரு பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது உத்தரவின் அடிப்படையில், அந்த தம்பதியினர் பாலைவனப் பகுதியில் அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், அந்த இருவரும் ஒரு டிரக்கில் பாலைவனத்துக்குள் அழைத்து செல்லப்படுவது, பின்னர் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் பதிவாகி, இணையத்தில் பரவி வருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகத்தின் பேரில் 14 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் ஆணவக் கொலைக்குத் தலையிட்டதாகக் கூறப்படும் பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயும் அடங்குகிறார்.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்தி தனது கண்டனத்தையும் நடவடிக்கையையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“ஒருவரை சுட்டுக்கொன்று அதனை வீடியோவில் பதிவு செய்வது மனித இயல்புக்கு எதிரான செயலாகும். யாருக்கும் இன்னொருவரின் உயிரைப் பெறுவதற்கான உரிமை இல்லை. இது ஒரு கொடூரமான குற்றம். சம்பந்தப்பட்ட எல்லா நபர்களும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை மாநில அரசு உறுதி செய்யும்,” என்றார்.

இந்தக் கொலை, பாகிஸ்தானில் ஆணவக் கொலைகள் தொடரும் ஒருசில பகுதிகளில் நிலவும் பழமைவாதச் சிந்தனைகளையும், சமூக ஒடுக்குமுறையையும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

Facebook Comments Box