மூன்று நபர்களின் டிஎன்ஏ கொண்டு குழந்தை பிறப்பு: மரபணு நோய்களுக்கு முடிவுக்கோடு வைக்கும் சாதனை முயற்சி!

மூன்று நபர்களின் டிஎன்ஏ கொண்டு குழந்தை பிறப்பு: மரபணு நோய்களுக்கு முடிவுக்கோடு வைக்கும் சாதனை முயற்சி!

மருத்துவ வரலாற்றில் புதிய பரிமாணமாக கருதப்படும் வகையில், பிரிட்டனில் மூன்று நபர்களின் டிஎன்ஏவைக் கொண்டு குழந்தை பிறந்துள்ளது. இதுவரை இந்த முறையில் 8 குழந்தைகள் பிறந்துள்ளன. மரபணு வழியாக பரவும் நோய்களை தடுக்கும் நோக்கில் இந்த நவீன கருப்பைச் சிகிச்சை பின்பற்றப்பட்டுள்ளது.

இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின், தந்தையின், மற்றும் கருமுட்டை தானம் அளிக்கும் மூன்றாவது பெண்ணின் டிஎன்ஏ-க்களும் அமையும். இத்தகைய கருமுட்டை தானம் “மைட்டோகாண்ட்ரியா தானம்” (mitochondrial donation) என்று அழைக்கப்படுகிறது. இதில், செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா எனப்படும் ஆற்றல் பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நியூகேஸ்டிலுள்ள மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் வெற்றியே இந்தப் பிறப்புகளாக கருதப்படுகிறது. இந்த முறையில் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் மரபணு நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். உலகம் முழுவதும் மரபணு குறைபாடுகள் பெரும்பாலான தம்பதிகளுக்கு சிக்கல்களாக உருவாகும் சூழலில், கருவாக உருவாகும் முன்பே மரபணு பிரச்சனைகளை சீர்செய்யும் முயற்சி, பெரிய முன்னேற்றமாகும்.

ஆனால், 3 நபர்களின் டிஎன்ஏ-வினால் குழந்தை பிறப்பிக்கப்படும் இத்தகைய முயற்சி மகிழ்ச்சியளிக்குமா? கவலைக்குரியதா? அல்லது ஏமாற்றமா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இது எப்படிச் செயல்படுகிறது?

‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ என்னும் மருத்துவ இதழில் இதற்கான இரு முக்கிய ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதில், மரபணு நோய்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஆபத்துள்ள 22 பெண்களுக்கு இந்த மைட்டோகாண்ட்ரியா தானம் சிகிச்சை அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லே சிண்ட்ரோம் (Leigh Syndrome) போன்ற மரபணு நோய்கள் இந்த முறையால் தடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில், தாயின் மற்றும் தந்தையின் நியூக்ளியர் டிஎன்ஏக்கள் எடுக்கப்படுகின்றன. அதுடன், மற்றொரு பெண்ணிடமிருந்து தரமான மைட்டோகாண்ட்ரியாவை கொண்ட கருமுட்டை பெறப்படுகிறது. இந்த தானம் மூலம் உருவாகும் கருமுட்டை, தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் மரபணு நோய்களைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது.

2015-ம் ஆண்டிலிருந்து வளர்ச்சி

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 2015-ல் மைட்டோகாண்ட்ரியா தானம் தொடர்பான சட்ட விவாதங்கள் நடைபெற்றன. இதில் சாத்தியக்கூறுகள், சாத்தியமான விளைவுகள் பற்றிய விவாதங்கள் இருந்தன. அந்த விவாதத்திற்குப் பின் 10 ஆண்டுகளில், தற்போது 8 குழந்தைகள் பிறந்துள்ளன. இது சாதனை என்றாலும், இந்த முயற்சியில் மக்கள் பணம் பெரிதும் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தகவல்கள் ஏன் வெளியிடப்படவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன.

மற்றொரு கேள்வி — இதனைத் துவக்கும்போது ஆண்டுக்கு 150 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது 10 ஆண்டுகளில் வெறும் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லையா?

மூன்றாவது, பாதுகாப்பு குறித்து. இந்த 8 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாயின் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ அளவு அதிகமாக இருப்பதால், நோய்களை முற்றிலும் தடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது, இந்த முறையால் முழுமையான தடுப்பு இல்லை; ஆனால் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மூன்று நபர்களின் டிஎன்ஏ கொண்டு, மரபணு பாதிப்பில்லாமல் குழந்தையை உருவாக்குவது ஒரு புதிய தொடக்கம்தான் என்றாலும், இதற்குள் பல சந்தேகங்கள் இருக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதினாலும், முழுமையாக கொண்டாட முடியாத நிலைதான் இருக்கிறது. இருப்பினும், பிறந்த 8 குழந்தைகளும் பரம்பரை நோய்களின்றி ஆரோக்கியமாக இருக்கின்றன என்பது நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கிறது.

இத்தகைய புதிய முயற்சிகளில், வெற்றி மட்டும் அல்ல; பொறுப்பும் அவசியம். இந்தத் துறையில் முன்னணி நாடாக இருப்பதற்காகவும், அதிக தம்பதிகள் இந்த சிகிச்சையின் பயனாளர்களாக மாறுவதற்காகவும், பிரிட்டன் அரசு மேலும் வெளிப்படையாகவும், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Facebook Comments Box