கம்போடியாவில் இணைய மோசடி: 105 இந்தியர்கள் பிடிபட்டு கைது
கம்போடியாவில் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய விவகாரங்களில், கடந்த 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 3,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 105 பேர் இந்தியர்கள்; அதோடு 606 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்தியர்களை தவிர, 1,028 சீனர்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசர்கள், 31 பாகிஸ்தானியர்கள் மற்றும் 82 தாய்லாந்து குடிமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது கணினி, மடிக்கணினி, செல்பேசி, இந்தியா மற்றும் சீனாவின் போலி போலீஸ் யூனிபார்ம், போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், எக்ஸ்டசி தூள் மற்றும் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தியாவை சேர்ந்த கைதிகளைக் கம்போடியாவில் இருந்து அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இணையவழி மோசடியில் ஈடுபட்டு பின்னர் தாயகத்திற்கு திரும்பும் இந்தியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.