டிஆர்எப் அமைப்புக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் இணைப்பு இல்லை – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
அமெரிக்க அரசால் அண்மையில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புக்கு, லஷ்கர்-இ-தொய்பாவுடன் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் அளித்த விளக்கத்தில், “டிஆர்எஃப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருப்பது, அவர்கள் எடுத்த souverign தீர்மானமாகும். அதில் எங்களுக்கு எதுவும் கூற வேண்டியதில்லை.
பஹல்காம் தாக்குதலில் இந்த அமைப்பின் ஈடுபாடு உறுதி செய்யப்படும் வகையில் உறுதியான ஆதாரங்கள் இருந்தால், அதையும் நாங்கள் ஏற்க தயார். ஆனால், டிஆர்எஃப் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனக் கூறுவது தவறு. ஏனெனில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் செயல்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.
அமெரிக்காவின் அறிவிப்பு:
“தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும் (FTO), உலகளாவிய அச்சுறுத்தல் அமைப்பாகவும் (SDGT) அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத் நீதி கோருவதிலும், எக்காரணத்திலும் தீவிரவாதத்திற்கு இடமளிக்காமலும் இருக்கும் அமெரிக்க அரசின் உறுதியை இது பிரதிபலிக்கிறது,” என மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இந்த அமெரிக்க நடவடிக்கையை இந்திய அரசு வரவேற்றது. ஆனால், பாகிஸ்தான் இதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.