இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று பரிசளித்த பிரதமர் மோடி: ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தின் பிரதிநிதியாக மரம் நடும் நிகழ்வு!

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று பரிசளித்த பிரதமர் மோடி: ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தின் பிரதிநிதியாக மரம் நடும் நிகழ்வு!

இங்கிலாந்தில் அரசு முறை பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் சார்லஸ் மூன்றாவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, மன்னர் சார்லஸுக்கு ஒரு மரக்கன்றை பரிசளித்தார்.

முன்னதாக, வியாழக்கிழமை பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மருடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் பின்னணியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்னர் சார்லஸை சந்தித்தார் மோடி. இந்த சந்திப்பு, மன்னரின் வாசஸ்தலமான சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் மோடி ‘சோனோமோ’ எனப்படும் மரக்கன்றை மன்னர் சார்லஸுக்கு பரிசளித்தார். இந்த மரக்கன்றை மன்னர் சார்லஸ் விரைவில் நட்டு வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

அந்த பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மன்னர் சார்லஸ், சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தின் அடையாளமாக, பிரதமர் மோடி ஒரு மரக்கன்றை மன்னருக்கு வழங்கினார். தாயை போற்றும் வகையில் இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், “மன்னர் சார்லஸுடன் சந்திப்பு மிகவும் அருமையாக அமைந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல தலைப்புகள் தொடர்பாக விவாதித்தோம். ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தில் மன்னர் சார்லஸ் இணைவது உலகளவில் மக்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாக அமையும். சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் சார்லஸ் அரசர் மிகுந்த கவனம் செலுத்தும்வர். இந்த சந்திப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் உரையாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கம் என்பது என்ன?

கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். அந்த நாளில், டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அவர் அரச மரக்கன்றை நடவு செய்தார். மக்கள் அனைவரும் புவியின் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதைத் தன் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் மக்கள் முன் பிரதமர் மோடி பகிர்ந்தும் இருக்கிறார்.

Facebook Comments Box