போர் நிறுத்த உடன்பாட்டை கம்போடியா மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு

போர் நிறுத்த உடன்பாட்டை கம்போடியா மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றச்சாட்டு

போர் நிறுத்த உடன்பாட்டை கம்போடியா மீறியுள்ளதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டு, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் நேற்று உடன்பட்டதற்குப் பின்னர் எழுந்துள்ளது.

எல்லையைச் சூழ்ந்த தகராறுகள் காரணமாக, கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லைப் பகுதியில் நடந்த கண்ணிவெடி வெடிப்பில் 5 தாய்லாந்து படையினர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் வெடித்தது. இதில் நேற்று வரை இருநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த சூழலில், தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடிய பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நேற்று மலேசியாவின் புத்ராஜெயாவில் அமைந்துள்ள பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவாக, இரு நாடுகளும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக போர்நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் அறிவித்தார். போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், போர்நிறுத்தத்தை மீறியதாகக் கம்போடியாவை தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. தாய்லாந்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் விந்தாய் சுவாரி இதுகுறித்து கூறியதாவது:

“போர் நிறுத்தம் அமலாக்கமான நேரத்தில், கம்போடிய படைகள் தாய்லாந்து எல்லைக்குள் பல பகுதிகளில் ஆயுதங்களை ஏந்தி மோதல்களில் ஈடுபட்டதை நாங்கள் கண்டறிந்தோம். இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை அராஜகமாக மீறியது மட்டுமல்ல, இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை குலைக்கும் செயல். எனவே, கம்போடியாவின் செயல்களுக்கு தாய்லாந்து சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால் இதற்கு எதிராக, கம்போடிய பிரதமர் ஹன் மானெட் கூறியதாவது, “நள்ளிரவு 12 மணி தொடங்கி எங்கள் படைகள் எந்தவிதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை. போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்” என்றார்.

Facebook Comments Box