ரஷ்யாவுக்கு பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் சுனாமி அலைகள்: சீனாவுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
ரஷ்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துக்குப் பின்னர் அங்கு சுனாமி ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
ஹவாயில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதால், கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹவாயின் மவுயி பகுதியில் உள்ள கஹுலுய் நகரில் கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சுனாமி அலைகள் எழுந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹவாய் அவசரநிலை மேலாண்மை அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ஹவாயின் ஹனாலி பகுதியில் ஆரம்ப கட்டமாக 3 அடி உயர சுனாமி அலைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. இந்த சுனாமி அலைகள் பல மணி நேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.
அமெரிக்க கடலோர காவல்படை, அனைத்து வணிகக் கப்பல்களையும் மற்றும் ஹவாய் தீவுகளின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை முழுமையாக திரும்பப் பெறப்படும் வரை எந்தவொரு கப்பலும் துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
இந்தநிலையில், மிட்வே அட்டோலில் 6 அடி உயர சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக ஹவாய் மாநில ஆளுநர் ஜோஷ் கிரீன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஹொனலுலு மாநகர மேயர் ரிக் பிளாங்கியார்டியுடன் இணைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உயரமான தரை பகுதிகள் அல்லது மாடிக் கட்டடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கடற்கரையோரத்தில் தங்குவது அல்லது அலைகளை நேரில் காணும் நோக்கில் உயிரைப் பணயம் வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். இது சாதாரண அலை அல்ல. இது உங்களை நேரடியாக அச்சுறுத்தக்கூடியது. சுனாமி தாக்கினால், அது உயிர் சேதத்துக்கே காரணமாகலாம்,” என்றார்.
இதனிடையே, சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பெரு மற்றும் ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை வழங்கி, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.