கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலஅதிர்வுக்குப் பிறகு ரஷ்யா, ஜப்பான் கடலோரங்களை தாக்கிய சுனாமி

கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலஅதிர்வுக்குப் பிறகு ரஷ்யா, ஜப்பான் கடலோரங்களை தாக்கிய சுனாமி

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கம்சாத்கா பகுதிகளில் பல கட்டிடங்களை அதிர வைத்தது. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் உள்ள 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து, கிழக்குப் பகுதியிலுள்ள ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. சம்பவம் தொடர்பான காட்சிகள் நேற்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. ரஷ்யாவின் சகலின் பகுதியைச் சேர்ந்த குரில் தீவுகளில் கடல்நீர் புகுந்து, பல கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஜப்பானின் முக்கிய வடக்குப் பகுதியாகும் ஹொக்கைடோவில் துறைமுகங்கள் சேதமடைந்தன. இங்கு நான்கு திமிங்கிலங்கள் கரைக்கு அடித்துக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜப்பான் அரசு, வடக்கு மற்றும் கிழக்குக் கடலோர பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை வழங்கியது. இதையடுத்து, கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தனர். அதேபோல, ரஷ்யா கடலோரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தகவல்.

குரில் தீவுகளை சுனாமி தாக்கியதையடுத்து, வடக்கு குரில் மாவட்டத்தில் அதிகாரிகள் அவசர நிலை அறிவிப்பை வெளியிட்டனர். வடக்கு பசிபிக் பகுதியில் ஏற்பட்ட சுனாமி அலைகள் காரணமாக, சீனாவிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள நியூசிலாந்து வரையிலான கடலோரத் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஹவாயி தீவுகளிலுள்ள மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். மேலும், ஓரிகான் எல்லையிலிருந்து வடக்கு கலிபோர்னியா வரை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.

Facebook Comments Box