சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய 7 தமிழர்களுக்கு அதிபரிடம் இருந்து விருந்து அழைப்பு!

சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய 7 தமிழர்களுக்கு அதிபரிடம் இருந்து விருந்து அழைப்பு!

சிங்கப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ஏழு தமிழர்களை பாராட்டும் வகையில், அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அவர்களுக்கு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

ஜூலை 26-ம் தேதி, சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் ஒரு பகுதியில் தரை திடீரென உள்வாங்கியது. அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று அந்த பள்ளத்துக்குள் முளைந்து விழுந்தது. அக்காட்சியை நேரில் கண்ட பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள், பயப்படாமல் செயல்பட்டு, காரிலிருந்து வெளியே வந்த பெண்ணை நைலான் கயிறு மூலமாக மீட்டனர்.

இந்த செயலுக்காக அவர்கள் மீது புகழ்ச்சிகள் குவிந்தன. மனிதாபிமானத்திற்கும், துணிச்சலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அந்த செயல் வைக்கப்பட்டது. இந்த பணியை செய்தவர்கள்:

  • பிச்சை உடையப்பன் சுப்பையா (47)
  • வேல்முருகன் முத்துசாமி (27)
  • பூமாலை சரவணன் (28)
  • கணேசன் வீரசேகர் (32)
  • போஸ் அஜித் குமார் (26)
  • நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25)
  • சாத்தபிள்ளை ராஜேந்திரன் (56)

இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களை நேரில் சந்திக்க அழைத்து உள்ளார். அவர்கள் மீது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், ஆகஸ்ட் 3-ம் தேதி, அதிபரின் இல்லத்தில் விருந்தளிக்கவும் திட்டமிட்டுள்ளார். அப்போது, அந்த 7 தமிழர்களுடன் தனிப்பட்ட உரையாடலும் நடத்தப்பட உள்ளது.

மேலும், இச்சம்பவம் பரவி, பொதுமக்களின் ஆதரவு பெருகியதை அடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு அமைப்பின் முகநூல் பக்கத்தில், அந்த 7 பேருக்கும் 1,639 நபர்கள் இணைந்து 72,241 சிங்கப்பூர் டாலர் (சுமார் ₹44 லட்சம்) நிதியுதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, தமிழர்களின் மனிதநேயம், துணிச்சல் மற்றும் சமூக விழிப்புணர்வு உலகளாவிய அளவில் ஒளிர்ந்து தெரிந்த அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.

Facebook Comments Box