பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் பகுதிகளில் நில அதிர்வு – மக்கள் பரபரப்பு
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பரபரப்புடனும் அச்சத்துடனும் வீடுகளை விட்டு வெளியேறினர். நில அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 2.04 மணிக்கு பூமியின் 102 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் ஆகிய பல மாவட்டங்களில் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், அட்டோக், டாக்ஸிலா, முர்ரி, சியால்கோட், குஜ்ரான்வாலா, குஜராத், ஷேக்குபுரா, ஃபெரோஸ்வாலா, முரிட்கே உள்ளிட்ட பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டது. அச்சத்தில் மக்கள் தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறினர். இருப்பினும், இதுவரை வந்திருக்கும் ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த நில அதிர்வால் உயிரிழப்பு அல்லது உடமையழிவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.