200 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கப்பூர் தமிழர்க் கலைக்கொத்து வெளியீடு: அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கல்
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் காலத்தை கடந்த வரலாற்று ஆவணமாகக் கருதப்படும் ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்கொத்தினை அந்த நாட்டின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இணையதளத்தில் வெளியிட்டார்.
சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய கட்டிட வளாகத்தில் உள்ள டிராமா சென்டரில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்கொத்து’ வெளியிடப்பட்டது. இந்த நூல், சிங்கப்பூர் தமிழர் சமூகத்தின் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைச் சார்ந்த சமூக, கலை, மரபு, கல்வி, மற்றும் அரசியல் வரலாற்றைக் கூறும் பதிவு ஆகும்.
சிங்கப்பூர் தமிழர் கலைக்கொத்திலுள்ள பன்முகத் தகவல்களில், தமிழ்ச் சமூகத்தின் சமூகப் புரட்சிகளை குறிப்பிட்டதுடன், அதனை அதிபர் தனது உரையில் மேற்கோளாகவும் சுட்டிக்காட்டினார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் விழாவில் உரையாற்றும் போது, “சிங்கப்பூர் என்ற தேசம் பல்கலைகளையும் மரபுகளையும் பாதுகாக்கும் தளமாகத் தொடர்ந்து திகழ வேண்டும். சமூக முன்னேற்றம் பாகுபாடின்றி நடைபெற வேண்டியது மிகவும் அவசியம். நம் நாடு பல இனக் கலாசார மரபுகளைக் காப்பாற்றக்கூடிய இடமாக இருக்க வேண்டும். இதுவே உலகளாவிய இந்திய சமூகத்திலுள்ள சிங்கப்பூர் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை தனித்துவமாக வைத்திருக்கச் செய்யும்,” என்றார்.
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் தேசிய நூலக வாரியம் இணைந்து உருவாக்கிய இந்த ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்கொத்து’ மின் நூல், நாட்டில் தமிழும் ஆங்கிலமும் உள்ளடக்கிய முதற்கட்ட கலைக்கொத்தாகும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
இதில், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றும், அனுபவங்களும் தலைமுறைகளை கடந்தும் செல்லும் வகையில் சுமார் 375 பகுதிகளில் துல்லியமான வரைவுகளும், புகைப்பட ஆதாரங்களும் கொண்ட பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தேசிய நூலக வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மின் நூலை இணையதளத்தில் வாசிப்பதற்கான நடைமுறை, இருமொழி ஆதரவுடன் வாசிக்க உதவும் தொழில்நுட்ப வசதி, மேலும் புதிய தலைப்புகளை இணைக்கும் முறைகள் குறித்து துணை ஆசிரியர்களான அழகிய பாண்டியன் மற்றும் சிவானந்தம் நீலகண்டன் விரிவாக விளக்கியனர்.
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தொகுப்பின் முதன்மை ஆசிரியருமான அருண் மகிழ்நன் உரையாற்றியபோது, “இந்த மின்னூல், மக்களைப் பற்றிய, மக்களால் உருவாக்கப்பட்ட தொட்டிலாகும். இந்தக் கருவூல உருவாக்கத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இதனை வாழும் கலைக்கொத்தாக வலுப்படுத்த சமூகத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைத் தொடர்ந்து மேற்கொள்வோம்,” என்றார்.
தேசிய நூலக வாரியத்திலுள்ள தமிழ்மொழி சேவைகள் பிரிவின் துணை இயக்குநர் அழகிய பாண்டியன் மேலும் கூறுகையில், “இந்தக் கலைக்கொத்துத் திட்டம் மூன்று வருட பயணமாக அமைந்தது. எதிர்கால சந்ததியருக்கான ஒரு பொக்கிஷத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது எனவே பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தேசிய நூலக வாரியம் இருக்கும் வரையில் இந்த சிங்கப்பூர் தமிழர் கலைக்கொத்து வாழும்,” என்றார்.
இந்த விழாவில் அதிபர் தர்மனின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல் மற்றும் மின்னணுக் களஞ்சிய மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள, கலாச்சாரம், சமூக மற்றும் இளையர் துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பங்காளிகள், தொண்டர்கள் மற்றும் சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.