ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதால் இந்தியாவுக்கு மேலும் வரி உயர்த்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேறிய பிறகு, பரஸ்பர வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்கப்படும் என முன்னதாகவே தெரிவித்திருந்த டொனால்ட் ட்ரம்ப், அதனை தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நிபந்தனைகள் கடுமையாகும் எனவும் கூறியிருந்தார். இதன் காரணமாகவே, இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.8,650 கோடி மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் மருந்துகள், எரிசக்தி சார்ந்த பொருட்கள், கனிமங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் அடங்கும். இவற்றில் பலவற்றுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து பெரும் அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், இது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி உதவியாக அமைவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது:
“வணிக உறவுகளுக்காக இந்தியா சிறந்த நாடாக இல்லை. ஏனெனில், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மிகுந்த அளவில் வரி விதிக்கிறது. இதனால், அமெரிக்க தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்க இயலவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்த உள்ளேன்” எனத் தெரிவித்தார்.