ட்ரம்ப், இந்தியாவுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார்
இந்தியாவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரியை, 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு, ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட 100-க்கும் அதிகமான நாடுகளின் மீது எதிர்மறையான வரி நடவடிக்கைகளை எடுத்ததோடு, 10 சதவீத அடிப்படை வரியும் விதித்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைமுறையில் வரும் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், மேலதிக அபராதங்கள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செயலை நிறுத்தாத நிலையில், இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்க ட்ரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
இந்தியா கண்டனம் தெரிவித்தது:
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது என்றும், இது ஏற்கத்தக்கதல்ல என்றும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. “நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம். இந்தியா, தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயார்” என வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா தானே ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் ஆகியவற்றை தொடர்ந்து இறக்குமதி செய்கிறது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ட்ரம்ப் “அதுபற்றி எனக்குத் தெரியாது. இதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு சரிபார்க்கிறேன்” என்று பதிலளித்தார்.