உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆகஸ்ட் 15-ம் தேதி அலாஸ்காவில் சந்திப்பு

வாஷிங்டன்/மாஸ்கோ:

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய அமைதி பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதின், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போர் பின்னணி

நேட்டோவின் உக்ரைனுடனான நெருங்கிய ஒத்துழைப்பை எதிர்த்து, ரஷ்ய அதிபர் புதின் 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை நிறுத்த பல உலகத் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

புதின் நிபந்தனைகள்

‘கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து உக்ரைன் மற்றும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும்; அப்படி நடந்தால் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் அளிப்பேன்’ என புதின் தெரிவித்துள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனை ரஷ்யாவின் பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் அவர் கோரியுள்ளார்.

ட்ரம்பின் நிலைப்பாடு

இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப், “எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் பிரதேச மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். சில பகுதிகள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்பக் கிடைக்கும், சில பகுதிகள் மாறக்கூடும். அது இரு தரப்பிற்கும் நன்மை தரும் வகையில் இருக்கும். புதின் அமைதியை விரும்புவதாக நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், “புதினை சந்திக்க நான் ஆவலாக காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 15-ம் தேதி அலாஸ்காவில் இந்தச் சந்திப்பு நடைபெறும்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

வரலாற்றுப் பின்னணி

கடந்த 2021-ல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசியது கடைசியாகும். அதன் பின்னர், தற்போது ட்ரம்ப் மற்றும் புதின் நேரடியாகச் சந்தித்து, உக்ரைன் போரின் முடிவை நோக்கி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமான நிகழ்வாகும்.

Facebook Comments Box