காசாவை கைப்பற்றும் இஸ்ரேல் திட்டம் ஆபத்தானது – ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை
காசா நகரத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் எடுத்த முடிவு, பாலஸ்தீன மக்களின் நிலைமையை மேலும் சீர்குலைக்கும் ஆபத்தான நடவடிக்கையாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா கைப்பற்றும் திட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்த தனது அறிக்கையில் அன்டோனியோ குட்டெரெஸ், “இஸ்ரேல் அரசின் இந்த முடிவு ஏற்கனவே பேரழிவில் வாழும் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும். இது மீதமுள்ள பணயக்கைதிகள் உட்பட பல உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். காசாவில் மக்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியில் உள்ளனர்.
உடனடியாக நிரந்தர போர்நிறுத்தம் அமல்படுத்தி, தடையற்ற மனிதாபிமான உதவிகளை அனுமதித்து, அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். சர்வதேச சட்டத்திற்கு இஸ்ரேல் இணங்க வேண்டும்.
இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவடையாமல், மோதலுக்கு நிலையான தீர்வு சாத்தியமில்லை. காசா, பாலஸ்தீன அரசின் அங்கமாகவே தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், இஸ்ரேலின் இந்த முடிவை விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் 10 அன்று அவசரக் கூட்டம் நடத்த உள்ளது.