துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது; மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன

வடமேற்கு துருக்கியின் சிந்திர்கி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 16 கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

இஸ்தான்புல், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இஸ்மிர் உள்ளிட்ட துருக்கியின் மேற்குப் பகுதிகளில் பல நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மையப்பகுதியாக இருந்த சிந்திர்கியில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பாலிகேசிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. சம்பவ இட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நாட்டின் அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு துருக்கியின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் சுமார் 53,000 பேர் உயிரிழந்தனர். அந்த வரலாற்று பேரழிவில் இந்தியா உட்பட பல நாடுகள் நிதியுதவி செய்தன. இந்நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம் துருக்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box