ரஷ்யாவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் – 4 மீட்டர் உயர சுனாமி பேரலை
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தில், ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியில் சுனாமி பேரலைகள் கரையை அடித்தன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, கம்சட்கா பகுதியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில், 19.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யா, ஜப்பான், பசிபிக் கடலோர நாடுகள் அனைத்துக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான பேரலைகள் குரில் தீவுகளை தாக்கின. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எச்சரிக்கை அறிவித்தது. டாஸ் (TASS) செய்தி முகமை, நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை உறுதி செய்ததோடு, மக்கள் வீதிகளில் அடைக்கலம் தேடி கூடியதாகவும், மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், அலாஸ்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, ஜூலை மாத ஆரம்பத்தில் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், 1952-ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் நிலநடுக்கத்தின் போது, ஹவாயில் 9.1 மீட்டர் உயரத்தில் பேரலைகள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.