அணு தாக்குதலுக்கு உத்தரவிடும் தலைவர்கள் உயிரிழந்தாலும், பழிக்கு பழி வாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்திருக்கும் ‘டெட் ஹேண்ட்’

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று கூறினார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தும், உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து ரஷ்யாவுக்கு போரை நிறுத்த 50 நாள் காலக்கெடு வழங்கிய அவர், பின்னர் அதை 12 நாட்களாக குறைத்தார்.

இந்த முடிவை ‘போரை நோக்கி தள்ளும் செயல்’ என ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், ட்ரூத் சமூக வலைதளத்தில், “மெட்வதேவ் அத்துமீறி பேசுகிறார்; எனவே ரஷ்யா அருகே 2 அணுசக்தி நீர்மூழ்கிகளை நிலைநிறுத்த உத்தரவிட்டேன்” எனப் பதிவிட்டார்.

இந்த அறிவிப்பை அணு போருக்கான மிரட்டலாகக் கருதிய மெட்வதேவ், “அமெரிக்காவின் எவ்வித பெரிய நடவடிக்கையும் ‘டெட் ஹேண்ட்’ அமைப்பைத் தூண்டும்; பின்னர் பின்வாங்கமாட்டோம்” என எச்சரித்தார்.

‘டெட் ஹேண்ட்’ என்றால் என்ன?

அமெரிக்கா–சோவியத் ரஷ்யா இடையேயான பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆயுத கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பே ‘டெட் ஹேண்ட்’. 1980-களில் சோவியத் யூனியன் இதை வடிவமைத்தது. எதிரி அணு தாக்குதல் நடத்தியால் ஏற்படும் நில அதிர்வு, அணுக் கதிர்வீச்சு போன்ற தரவுகளை இந்த அமைப்பு பெறும்.

சாதாரணமாக அணு தாக்குதலுக்கான உத்தரவு அதிபரிடம்தான் இருக்கும். ஆனால் தாக்குதலில் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் உயிரிழந்தால், ‘டெட் ஹேண்ட்’ தானாக செயல்பட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அணு குண்டுகளுக்கு தாக்குதல் உத்தரவை அனுப்பும். பின்னர் அந்தக் குண்டுகள் தானாகச் செயல்பட்டு எதிரி நாட்டைத் தாக்கும்.

சோவியத் யூனியன் சிதைந்த பின்பும், ரஷ்யா இந்த அமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி வைத்துள்ளது. தற்போது இது செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படும் வல்லமை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்வதேவின் சமீபத்திய எச்சரிக்கை, ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

Facebook Comments Box