ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’ – அடுத்து என்ன?
ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்கர் முஸ்லியார் மத்தியஸ்தம் மேற்கொண்டார். அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் அதிகாரிகள் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வருவதாகவும், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் முழுமையாக உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அபுபக்கர் முஸ்லியாரின் கோரிக்கையை ஏற்று, ஏமன் நாட்டை சேர்ந்த மதகுரு ஹபீப் உமர் பின் ஹபீஸ், நிமிஷாவின் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும், தண்டனையை பரிசீலிக்கவும் வல்லுநர் குழுவை அமைத்தார். இதன் பின்னர், பேச்சுவார்த்தை மற்றும் தண்டனை பரிசீலனை முடிவில், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏமனின் சமூக செயற்பாட்டாளர் சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி சமூக வலைதளத்தில் இதை உறுதி செய்தார். அவர் கூறியதாவது:
“மத குருமார்களின் வலுவான தலையீடு காரணமாக நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது நிமிஷா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்.”
அடுத்து என்ன?
மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறையில் உள்ள நிமிஷாவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன:
- குருதிப் பணம் (தியா) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டால் நிமிஷா சிறையிலிருந்து வெளியே வரலாம்.
- அந்த குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்தால், நிமிஷா சிறையில் தொடரும்.
குற்றப் பின்னணி
நிமிஷா பிரியா (38) பாலக்காட்டை சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். 2015-ல் அரசு பணியிலிருந்து விலகிய அவர், ஏமனில் ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக, நிமிஷா மயக்க ஊசி மருந்தை மெஹ்திக்கு செலுத்தினார். அதில் அவர் உயிரிழந்தார். சனா நகர நீதிமன்றம் 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடி குருதிப் பணம் வழங்கி நிமிஷாவை மீட்க குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும், ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலம் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவை சேர்ந்த கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.