புதிய மைல் கல்லை எட்டிய NASA
நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இந்தியாவின் தென்-கிழக்கு கடற்கரையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 30-ம் தேதி ஏவப்பட்ட நிசார் செயற்கைக்கோள், இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியாகும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் GSLV-F16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினால் இயங்கும் GSLV-F16, தற்போது இந்தியாவின் விண்வெளி திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
1.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2.8 டன்களுக்கு மேல் எடைகொண்ட NISAR, இந்திய விண்வெளி வரலாற்று கட்டமைக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறை இயக்கங்கள் மற்றும் காடுகளின் சீரழிவு ஆகியவற்றால், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அங்குல அங்குலமாகக் கண்காணிப்பதையே இந்த செயற்கைக்கோள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், பேரிடர் தயார்நிலை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் காலநிலை மீட்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஏவப்பட்ட 17 நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 15-ம் தேதி, நிசார் செயற்கைக்கோளின் 12 மீட்டர் ரேடார் ஆண்டனா ரிஃப்ளெக்டார் சுற்றுவட்டப்பாதையில் விரிவடைந்தது. தங்க முலாம் பூசப்பட்ட கம்பி வலையாலான இந்த டிரம் வடிவ ரிஃப்ளெக்டார், பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நாசாவின் பணிக்காக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாகும்.
நிசார் செயற்கைக்கோள் அதன் இட்டை ரேடார் அமைப்புகள் மூலம் நாசாவிலிருந்து L-பேண்ட் மற்றும் இஸ்ரோவிலிருந்து S-பேண்ட் ஆகியவை மூலம் நுண்ணலை துடிப்புகளைப் பூமியை நோக்கிச் செலுத்தி, தேவையான சமிக்ஞைகளை திரும்பப் பெறுவதன் மூலம், மேகங்கள், தாவரங்கள் மற்றும் மழையைக் கடந்தும் HIGH RESOLUTION IMAGING-ஐ செயல்படுத்துகிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மேற்பரப்பு மாற்றங்களின் 3D நேர-இடைவெளி வரைபடங்களை உருவாக்க முடியும் எனவும், இந்த தரவுகள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவுகளுக்கு முன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு முடிவுகளை மேற்கொள்வதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.
தற்போது நிசார் செயற்கைக்கோளின் ஆண்டனா நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நிசார் குழு ரேடார் அமைப்புகளை அளவீடு செய்து, முழு அளவிலான அறிவியல் நடவடிக்கைகளுக்குத் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அக்டோபர் 2025-க்குள் தரவுகளை வழங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.